இன்றைய சூழலில், ஒரு பதவிக்கான தேர்ச்சி முறை என்பதில் நேர்காணலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நேர்காணல் என்பதுதான் எந்த ஒரு நிறுவனத்திற்கும் வசதியான தேர்ச்சி முறையாக உள்ளது. ஐ.டி., துறை அபரிமிதமாக வளர்ச்சி கண்டு வரும் இந்த நாட்களில் ஐ.டி., பணிக்கான நேர்காணல் என்பது எப்படி இருக்கும் என்பதே ஒவ்வொரு ஐ.டி., துறையைச் சார்ந்த ஆர்வலரின் கேள்வியாக இருக்கிறது.
எனவே ஐ.டி., பணிக்கான நேர்காணலுக்கு செல்லும் முன் ஒருவர் தனக்குத் தெரிந்த வரையில் சாத்தியமுள்ள அனைத்து கேள்விகளுக்கும் தன்னைத் தயார் செய்வது வழக்கமாக இருக்கிறது. பொதுவான நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்வி
களுடன் ஐ.டி., பணி தொடர்புடைய குறிப்பிட்ட கேள்விகளை எதிர்கொள்ள இவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட கேள்விகள் என்பது உங்கள் கல்வி, திறன், நீங்கள் பெற்றிருக்கும் சான்றிதழ்கள், கம்ப்யூட்டர் மொழிகள், நீங்கள் பழக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் டூல்கள் குறித்து இருக்கலாம். அதிலும் சில குறிப்பிட்ட பிரச்னைகளை எந்த வகையில் வெற்றிகரமாக எதிர்கொண்டோம் என்பதை உங்களை பணிக்கு எடுக்க இருக்கும் மேலாளரிடம் விளக்குவது சிறப்பானதாக அமையும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
ஒரு நேர்காணலை இப்படித்தான் நடத்த வேண்டும் என்பதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட வரையறை செய்யப்படுவதில்லை. உங்கள் பணி குறித்த எந்த ஒரு கேள்வியையும் உங்களிடம் கேட்பதற்கு சாத்தியங்கள் உள்ளன என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளவும். இன்றைய பெரும்பாலான நேர்காணல்களில் நேர்காணல் கேள்விகளை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதையும் பணி வாய்ப்பாளர்கள் கவனிக்கிறார்கள். தற்போதைய மற்றும் எதிர்காலத்தின் பணித் தேவைகளை நீங்கள் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதும் முக்கியத் தேவையாக மாறி வருகிறது. உதாரணமாக 'ஒரு கம்ப்யூட்டர் மவுஸ் எப்படி வேலை செய்கிறது' என்பது போன்ற முற்றிலும் வித்தியாசமான கேள்விகளைக் கேட்டு உங்களின் பதில் சொல்லும் திறனை அறியும் வாய்ப்புகளும் உள்ளன.
உங்களைப் பற்றி, உங்கள் திறன்களைப் பற்றி, உங்கள் பணியைப் பற்றி, உங்கள் நிறுவனத்தைப் பற்றி, தொழில் நுட்ப ரீதியாக என்று பல்வேறு கோணங்களில் உங்களை ஐ.டி., பதவிக்கான நேர்காணலுக்குத் தயார் செய்து கொள்வதே நல்ல பலனைத் தரும் என்று ஐ.டி., துறை சார்ந்த எச்.ஆர்., வல்லுனர்கள் கூறுகிறார்கள்.